ரயில்வே பட்ஜெட் பரபரப்பில் இலங்கை விவகாரத்தை ஊத்தி மூட முயன்ற மத்திய அரசு!


ரயில்வே பட்ஜெட் பரபரப்புக்கு மத்தியில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் குறித்த விவகாரத்தை ஊத்தி மூடி விட்டது மத்திய அரசும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும்.

மிகவும் சென்சிட்டிவான இந்தப் பிரச்சினையை படு சாதாரண ஒன்றாக கருதி அதை மதிப்பில்லாமல் போகச் செய்து விட்டனர் மத்திய வெளியுறவு அமைச்சரும், மத்திய அரசும்.

இந்தப் பிரச்சினை குறித்து நேற்று நாள் முழுவதும் ராஜ்யசபாவில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் பிரச்சினை எழுப்பியபோதும் அதுகுறித்து அவையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங் ஒரு வார்த்தை கூட பேசாமல் கம்மென்று இருந்தார்.

அவர் நினைத்திருந்தால் இதுகுறித்துப் பேசியிருக்கலாம். வெளியுறவுத்துறை அமைச்சர் வந்துதான் பதிலளிக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரே ஏதாவது கருத்து தெரிவித்திருக்கலாம். ஆனால் எதையுமே அவர் பேசவில்லை. மாறாக மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா பதிலளிப்பார் என்று அவையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பிரச்சினையால் நேற்று நாள் முழுவதும் அவைக் கூட்டத்தை தமிழக எம்.பிக்கள் நடத்த விடாமல் முடக்கி விட்டனர். இந்த நிலையில் இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சமயம் பார்த்து கிருஷ்ணாவை விட்டு ஒரு அறிக்கை வாசிக்கச் செய்துள்ளது மத்திய அரசு.

இது உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. காரணம், ரயில்வே பட்ஜெட் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை விவகாரத்தை புகுத்தி அதை ஒன்றுமில்லாமல் ஊத்தி மூடச் செய்யும் உத்தியே இது என்று கருதப்படுகிறது. அதன்படியே ரயில்வே பட்ஜெட்டுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் இன்று நடந்த சிறிய அளவிலான விவாதம் முடங்கிப் போய் விட்டது.

இதேபோல நாளை மறு நாள் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரம் பார்த்து இலங்கை விவகாரம் தொடர்பாக மேலும் சில முக்கிய முடிவுகளை அறிவித்து இந்த விவகாரத்தை மறுபடியும் மூடி மறைக்க மத்திய அரசு முயலலாம் என்று கருதப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, இல்லையா என்பது குறித்து தனது இன்றைய விளக்கத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு வார்த்தை கூட தெரிவிக்காமல் உட்கார்ந்து விட்டார் என்பது தமிழக அரசியல் கட்சிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அடுத்து அவர்கள் ராஜ்யசபாவில் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item