அரசு நர்சிங் கல்லூரி மாணவிகளிடம் வெற்று தாளில் கையெழுத்து வாங்கிய பின் விடுதியில் சேர்க்கப்பட்டனர்!!
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_8039.html

விடுமுறை முடிந்து திரும்பிய அரசு நர்சிங் கல்லூரி மாணவிகளிடம் வெற்று தாளில் கையெழுத்து வாங்கிய பின் விடுதியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுடைய பெற்றோரிடமும் அதிகாரிகள் கையெழுத்து வாங்கியதால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனால் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள், அரசு மருத்துவமனைகளில் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவ தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால்தான் அரசு மருத்துவமனைகளில் பணி வழங்கப்படும். இந்த தேர்வை தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளும் எழுதலாம் என்று அரசு அறிவித்தது.
இதற்கு அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.'பணி நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை மாணவ, மாணவிகள் நடத்தினர். போராட்டம் தொடர்ந்ததால் தமிழகம் முழுவதும் உள்ள 23 அரசு நர்சிங் கல்லூரிகள் மற்றும் விடுதிகளை இழுத்து மூட சுகாதாரத் துறை உத்தரவிட்டது.
12 நாட்கள் விடுமுறைக்கு பின்பு மீண்டும் விடுதிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள நர்சிங் விடுதிகளுக்கு இன்று காலை பெற்றோருடன் மாணவிகள் வரத் தொடங்கினர். இதற்கிடையில், மாணவிகள் மீண்டும் போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க, அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அவற்றை ஏற்றுக் கொள்ளும் மாணவிகள் மட்டுமே விடுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்லூரி, விடுதி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். எனவே, விடுதிக்குள் மாணவிகள் உடனடியாக அனுமதிக்கப்படவில்லை. அதிகாலையில் வந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் பல விடுதிகளில் பெட்டிகளுடன் பனியில் காத்திருந்தனர்.
அவர்களிடம் அரசின் நிபந்தனைகளை விடுதி காப்பாளர்கள் தெரிவித்தனர். வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொள்வதாக மாணவிகளின் பெற்றோர் சம்மதித்தனர். இதையடுத்து, 'போராட்டம் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து திரும்பவும் விடுதியில் சேர்ந்து விட்டோம்' என மாணவிகள் கைப்பட எழுதிய கடிதத்தை பெற்று கொண்டனர்.
அதில் மாணவிகளின் பெற்றோரிடமும் கையெழுத்து வாங்கினர். அத்துடன் விடாமல், வெற்று பேப்பரிலும் மாணவிகள், பெற்றோரிடம் கையெழுத்திடுமாறு கூறினர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை ஜி.எச் உள்பட பல நர்சிங் கல்லூரி விடுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, வெற்று பேப்பரில் கையெழுத்திட்டனர். அதை காப்பாளர்கள் பெற்றுக் கொண்டு மாணவிகளை விடுதிக்குள் அனுமதித்தனர்.
அதன்பின் சீருடை அணிந்து கல்லூரிக்கு மாணவிகள் சென்றனர். தமிழகத்தின் பல நர்சிங் கல்லூரிகளிலும் பல கெடுபிடிகள் இருந்தன. இதனால் பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வெற்றுத் தாளில் அரசே கையெழுத்து வாங்குவது மோசமான நடவடிக்கை என்று பெற்றோர் பலர் கூறினர்.

