ஓடாத படத்துக்கு 100 நாள் போஸ்டர் அடித்தது கொஞ்சம் ஓவர் - சினிமா விமர்சகர்கள் கண்டனம்

வேலாயுதம் நூறாவது நாள் போஸ்டரைப் பார்த்த போது ‌ரீல் விடுவதில் சினிமாக்காரர்களை மிஞ்ச ஆளில்லை என்பது தெ‌ளிவாகப் பு‌ரிந்தது. நான்காவது வாரத்திலேயே இழுத்து மூடப்பட்ட இந்தப் படம் நூறு நாட்கள் - அதுவும் பதினைந்து தியேட்டர்களில் ஓடியதாக போட்டிருக்கிறார்கள். இதில் அனேகமாக எல்லா திரையரங்குகளிலிருந்தும் இந்தப் படத்தை நூறு நாட்களுக்கு முன்பே தூக்கிவிட்டார்கள். பிறகேன் இந்த வீண் ஜம்பம்? 

விஜய்யின் வேலாயுதம் மட்டுமின்றி அமோக வெற்றி என்று சொல்லப்பட்ட காவலனும்கூட பலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படம்தான். அதற்கு முந்தைய வில்லு, அழகிய தமிழ்மகன் போன்ற அரை டஜன் ப்ளாப்கள் அனைத்துத் தரப்பின‌ரின் பாக்கெட்டையும் கிழித்தது. இத்தனைக்குப் பிறகும் தயா‌ரிப்பாளர்கள் விஜய்யை பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாகதான் பில்டப் கொடுத்து வருகிறார்கள். வேலாயுதம் போஸ்ட‌ரில் இது வெட்ட வெளிச்சம். 

ர‌ஜினிக்குப் பிறகு அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஹீரோவாக விஜய்யே இருந்தார் என்பது தொலைதூர உண்மை. தோல்வியடைந்த வேலாயுதம், காவலன்கூட பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றிருக்க வேண்டியது. அதனை தடுத்தது சந்தேகமில்லாமல் விஜய்யின் சம்பளம். நாற்பது கோடி பட்ஜெட்டில் பதினைந்து பதினெட்டு கோடி விஜய்யின் சம்பளத்துக்கே ச‌ரியாகிவிடுகிறது. இந்த சம்பளத்தைக் குறைத்தால் பட்ஜெட்டும் முப்பதுக்குள் வந்துவிடும். லாபமும் அனைவரையும் சென்றடையும். 

ஹீரோக்களின் தகுதிக்கு மீறிய சம்பளத்தால் தயா‌ரிப்பாளர் அதிக விலைக்கு படத்தை விநியோகிக்க வேண்டியுள்ளது. தியேட்டர்க்காரர்கள் ஒரு லட்சம் வசூலிக்கும் படத்துக்கு ஐந்து லட்சம் அழுகிறார்கள். இதனை ஈடுசெய்ய முதல் ஒருவாரம் டிக்கெட் ராக்கெட் விலைக்கு விற்கும். ரசிகனுக்கு வேறு வழியில்லை, திருட்டு விசிடி தான் ஒரே விமோசனம். 



திரைப்பட வர்த்தகத்தை சீட்டுக்கட்டாக கலைக்கும் ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்காமல் அவர்களுக்கு தயா‌ரிப்பாளர்கள் வெற்றி நாயகன் பெயி‌ண்ட் அடிக்கிறார்கள். இதனால் அவர்களின் சம்பளம் படத்துக்கு படம் ஏறுகிறது. இவர்களுக்கே இவ்வளவா என்று தொழிலாளிகளும் உழைப்புக்கு மீறிய சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள். 

நண்பன் படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் தரக்கூடிய படம்தான். அதனை விஜய்யின் சம்பளமும், ஷங்க‌ரின் சம்பளமும் பதம் பார்த்திருக்கிறது. பட்ஜெட்டில் பாதிக்கு மேல் இவர்களின் சம்பளம் என்றால் லாபத்துக்கு எங்கே போவது. நகரங்களில் அதுவும் மல்டிபிளிக்ஸில் லாபம் தந்த இப்படம் தனி திரையரங்குகளில் இரண்டாவது வாரமே காற்று வாங்கியது. சி சென்டர் பற்றி சொல்லத் தேவையில்லை. கன்னியாகும‌ரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் ஊர் பனச்சமூடு. இங்குள்ள திரையரங்கில் நண்பனை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கி வெளியிட்டார்கள். முதல் நாள் நூறு ரூபாய் வைத்து ஓட்டியதால் பதினேழாயிரம் ரூபாய் வசூல். அடுத்த நாள் டிக்கட் விலையை குறைத்தும் கலெக்சன் பணால். முப்பதாயிரம் ரூபாய் வரை நஷ்டம் வரும் என புலம்பிக் கொண்டிருக்கிறார் திரையரங்கை லீசக்கு எடுத்து படத்தை ஓட்டியவர். இதே நிலைதான் பல இடங்களில். 

இந்த நிலையில் நண்பனைவிட சுமார் வெற்றியான வேலாயுதத்துக்கு நூறு நாள் பாசாங்கு போஸ்டர் எதற்கு? விஜய் அடுத்தப் படத்தில் இன்னும் சில கோடிகளை அதிகமாக பெறுவதற்கா? விஜய் என்ற மாஸ் ஹீரோவின் நிலையே இப்படி என்றால் யங் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, சின்ன தளபதி படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மேக்கப்பில் முகத்தை மறைப்பவர்கள் போஸ்ட‌ரில் தோல்வியை மறைக்கப் பார்க்கிறார்கள். தெய்வத்திருமகள் சென்னையில் மட்டும் நன்றாகப் போனது. அதுவும் புறநக‌ரில் புலம்பல்தான். அனேகமாக எல்லோருக்கும் தோல்வியை தந்த இந்தப் படத்திற்கு பதினைந்து நாட்களில் மூன்று வெற்றி விழாக்களை எடுத்தார்கள். எதற்கு இந்த பொழப்பு? 

ஓடாத படத்துக்கு நூறு நாள் போஸ்டர் அடிப்பது, வெற்றிவிழா எடுப்பது என்று கற்பனையில் காலம் தள்ளுகிறார்கள் நமது கதாநாயகர்கள். இவர்கள் படங்களின் பட்ஜெட்டையும் படத்தின் கலெக்சனையும் தியேட்டர் வா‌ரியாக வெளியிட்டு இவர்களின் போஸ்டர் பிம்பத்தை கலைத்தால் தானாக திரையுலகம் உருப்படும்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item