கன்னி ஆவியின் சேட்டை.. தொடரும் துர்மரணம் !

http://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_3278.html

தொடர்ச்சியாக நேர்ந்து வரும் மரணங்களால், அச்சத்தில் தவித்து வருகிறது ஒரு கிராமம். இதுவரை இல்லாதபடி நிகழும் சாவு சம்பவங்கள் அந்த கிராம மக்களை பீதியில் உறைய வைத்துள்ளன. நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் தென்காசியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஆய்க்குடி கிராமம். இயற்கை அழகுக்கு பஞ்சமில்லை. வீதிக்கு வீதி கோயில்கள் உள்ளன. திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக, சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடப்பது இங்குதான். அப்படிப்பட்ட ஊர்தான் தற்போது பயத்தில் சிக்கி கிடக்கிறது.
தொடர் மரணங்கள் கிராம மக்களை அலற வைத்துள்ளன. டீக்கடை, மரத்தடி, திண்ணை.. என எங்கு, யார் கூடி பேசினாலும் சாவுகள் பற்றிய பேச்சுதான். இதனால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
ஆய்க்குடியை சேர்ந்த வாலிபர்கள் சிலர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக வேனில் சென்றுள்ளனர். அப்போது பயங்கர விபத்தை சந்தித்தார்கள். சங்கர் என்ற வாலிபர் இறந்தார். இந்த சோகம் மறைவதற்குள் அடுத்தடுத்த மரண செய்திகள் ஊரில் உலா வரத் தொடங்கின. வாலிபர் தற்கொலை, தீக்குளித்து பெண் இறப்பு, வீடு இடிந்து தொழிலாளி உயிர் பறிபோனது, துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மாரியப்பன் விபத்தில் சிக்கி பலியானது.. என பல வகையிலும் இறப்புகள் தொடர்ந்தன. இதனால் மக்கள் பரபரப்புக்கும் பதற்றத்துக்கும் ஆளானார்கள். தற்கொலை, விபத்து, தீக்குளிப்பு போன்றவை மட்டுமின்றி விபரீதமான முறையிலும் பல சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. சுடுகாட்டு மரத்தில் ஒருவர் தூக்கு போட்டு இறந்தது, தூக்கத்திலேயே ஒரு தொழிலாளி இறந்தது, 2 விவசாயிகள் திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்து செத்தது, 2 பெண்களின் திடீர் சாவு, திடீரென காய்ச்சல் வந்து ஒருவர் இறந்தது, தண்ணீர் பிடித்த பெண் வழுக்கி விழுந்த சாவு.. என்று சமீபத்திய துர்மரணங்களை பீதியுடன் பட்டியலிடுகின்றனர் கிராமத்தினர்.

இவை எல்லாம் குறுகிய கால இடைவெளியில் நடந்திருப்பதுதான் மக்களை பீதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 40 நாட்களில் 20க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். ‘‘இறப்புகள் சகஜம். ஆனாலும், இதுவரை இல்லாதபடி மரணம் என்பது தொடர்கதையாக இருப்பதுதான் பயத்தை ஏற்படுத்துகிறது. பலரது சாவுக்கு உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஊரில் தெய்வ குத்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை. பேய், பிசாசு, சாத்தான், ஆவி போன்ற தீய சக்திகளின் நடமாட்டம் இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறோம்’’ என்கின்றனர் சில பெரியவர்கள்.
செல்லம்மாள் என்ற பாட்டி கூறும்போது, ‘‘எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து, கிராமத்துல இத்தனை பரு வரிசையா செத்தது கிடையாது. நடக்கிற சம்பவங்களை பார்க்கும்போது, ஆவியோட சேட்டையா இருக்கும்னு தெரியுது. கல்யாணம் ஆகாம இறந்த கன்னிப் பொண்ணின் ஆவிதான் இப்படி சேட்டை செய்யுது. பரிகார பூஜை செஞ்சு கன்னிப் பொண்ணு ஆவியை சாந்தப்படுத்தினாத்தான் துர்மரணங்கள் குறையும். ஆவி பயத்துல பொண்ணுங்க கருக்கலுக்கு மேல வெளியில போகவே பயப்படுறாங்க’’ என்றார். தொடர் மரணங்களும் ஆவி பீதியும் ஆய்க்குடி கிராமத்தினரை திகிலில் ஆழ்த்தி யிருக்கிறது.