முள்ளிவாய்க்கால் பேரழிவின் தொடர்ச்சியே, மாவீரர் தினச் சிதைவு முயற்சி!
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_8332.html
சிங்கள அரச படைகளால் தமிழீழ விடுதலைப் புலிகளது ஆயுத பலம் நிர்மூலமாக்கப்பட்ட பின்னர், தமிழீழ மக்களுக்கான நீதி கோரும் போராட்டம் சர்வதேச மயப்பட்டதாக மாற்றம் பெற்றுள்ளது.
கொடூரமான இன அழிப்பு யுத்தம் ஒன்றைத் தடுத்து நிறுத்த முடியாத குற்ற உணர்ச்சியினால், உலகின் மனித நேயம் மிக்க சக்திகள் சிங்கள தேசத்திற்குப் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றது. இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனிதத்திற்கெதிரான குற்றங்கள் குறித்த விசாரணைக் கோரிக்கைகள் அனைத்துலக மட்டத்தில் அதிகரித்து வருகின்றது.
விடுதலைப் புலிகளது ஆயுத போர்க்களத்திற்கு நிகரானதொரு மனித நேயப் போர்க் களத்தை 'சனல் 4' என்ற பிரித்தானிய தொலைக்காட்சி ஆரம்பித்து வைத்தது. இறுதி யுத்த காலத்தில், தனது கடமைகளை நேர்மையாகச் செய்யத் தவறிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், தனது தவறுக்குப் பிராயச்சித்தமான அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை அனைத்துலக நாடுகளின் சார்பு நிலைச் செயற்பாடுகளை மீள் பரிசீலனை செய்ய வைத்தது. விக்கிலீக்ஸ் இணைய ஊடகம் அவ்வப்போது சிங்கள தேசத்தின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தி வருகின்றது.
ஆக மொத்தத்தில், விடுதலைப் புலிகளின் தியாகமும், தமிழீழ மக்களின் அர்ப்பணிப்பும், நடாத்தி முடித்த மனிதப் பேரவலங்களுக்குப் பின்னரும் நீதியை வழங்க மறுக்கும் சிங்கள அரசுக்கெதிரான சர்வதேச அழுத்தங்களாக விரிவடைகின்றன. விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்த காலத்தில் இராணுவ ரீதியாக எதிர்கொண்ட அச்சுறுத்தல்களிலும் பார்க்க, மிகப் பெரும் இழப்புக்களை சிங்கள அரசு எதிர்கொண்டு வருகின்றது என்றால் மிகையாகாது.
ஆயுத போராட்டம் இலங்கையில் முடிவுக்கு வந்துள்ள தற்போதைய நிலையில், சிங்கள தேசத்திற்கு எதிரான அல்லது தமிழீழ மக்களுக்கு ஆதரவான அனைத்துலக நிலைப்பாட்டைத் தகர்ந்து போகாத வண்ணம் தக்க வைக்கவும், முன் நகர்த்தவுமான பலம் புலம்பெயர் தமிழ் மக்களிடமே உள்ளது. அதாவது, ஒன்றாக நின்று, ஒரே குரலில் எங்களது தாயக விடுதலைக்கான கோரிக்கையினை முன் வைப்பதன் ஊடாக நீதி கோருதல் மட்டுமே. இதுவே, சிறிலங்கா அரசின் சிங்கள தேசிய இலக்குக்குச் சவாலாகவும் உள்ளது. இதனால், புலம்பெயர் தமிழர்களது ஒன்றுபட்ட பலத்தினைச் சிதைப்பதனூடாகத் தன்னை அனைத்துலக அழுத்தங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள முயற்சிக்கின்றது.
சிங்கள அரசின் கடந்த கால நடவடிக்கைகள் மூலம், புலம்பெயர் தேசங்களில் சிங்கள அரசு என்ன செய்ய முற்படும்? என்பதை நாங்கள் புரிந்து கொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சக்தியாக டக்ளஸ் தேவானந்தவை உருவாக்கிய சிங்கள அரசு, தேசியத் தலைவரது பக்கத்திலிருந்தே கருணாவை தேசிய அழிவு சக்தியாக உருவாக்கியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதனூடாகத்தான், தற்போதைய புலம்பெயர் தளத்தின் அசாதாரண சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் வரையும் விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்துடன், தேசியத் தலைவரது எண்ணங்களை வடிவமைக்கும் பெரும் ஆற்றல்மிகு சக்தியாக இருந்த புலம்பெயர் தளத்திற்கு என்ன நேர்ந்தது?
தற்போதைய புலம்பெயர் தளங்களின் நிலையை, கருணாவின் வடக்கு - கிழக்குப் பினவுபடுத்தலுடன் இணைத்துப் பார்க்கலாம். வடக்கையும் - கிழக்கையும் பிரித்து, தமிழீழக் கனவைச் சிதைப்பதற்காக சிங்கள அரசின் கைக்கூலியான கருணா விடுதலைப் புலிகள் மீது வைத்த குற்றச்சாட்டை நாம் மீள்பார்வை செய்தல் வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால், கருணாவின் வாதங்கள் நியாயம் என்ற மயக்கத்தை உருவாக்கும். வடக்குக்கும், கிழக்கிற்கும் இடையேயான கல்வி, பொருளாதார ஏற்ற தாழ்வு என்பது வெளிப்படையானது. வடக்கிலிருந்து கிழக்கிற்குச் சென்றவர்களது ஆதிக்கம் அங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது என்பதும் உண்மையே. சிங்கள தேசம் கருணா மூலமாக இந்தக் கிளர்ச்சியை மேற்கொண்டபோது, ஆரம்பத்தில் கிழக்கு மக்கள் மயக்கமான ஆதரவையும் வழங்கியிருந்தனர். அதை, அவர்கள் புரிந்து கொள்வதற்கு முன்னர் அழிவு சக்திகள் ஆழமாக வேரூன்றிவிட்டன.
இறுதியில், தமிழீழ மண்ணின் அத்தனை அவலத்திற்கும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் மரணத்திற்கும், விடுதலைப் புலிகளது களமுனை இழப்பிற்கும் இதுவே வகை செய்தது. கருணாவும் ஒரு போராளிதான். விடுதலைப் புலிகளின் தென் பிராந்திய தளபதிதான். ஆனாலும், விலைபோன அவரது ஈனச் செயல் காரணமாகத் தமிழீழம் என்ற தமிழினத்தின் இலட்சியம் மட்டுமல்ல, அதற்காகத் தம்மை அர்ப்பணித்த விடுதலைப் புலிகளும், மக்களும் சேர்ந்தே பலிகொள்ளப்பட்டனர்.
இப்போது, அதே காட்சிகள் புலம்பெயர் தேசங்களில் அரங்கேற்றப்படுகின்றது. தேசியத் தலைவர் மீதும், விடுதலைப் புலிகள்மீதும் கருணா முன்வைத்தது போன்ற குற்றச்சாட்டுக்களே புலம்பெயர் தேசங்களிலும் முன் வைக்கப்படுகின்றது. குறிப்பாக, மாவீரர் தினம் குறித்து இவர்களால் விடுக்கப்படும் கேள்விகள் அவர்களது நோக்கத்தைக் கேள்விக்குறியாக்குகின்றது.
- மாவீரர் தினம் பெரிய மண்டபங்களில் நடாத்தப்படுவதும், அங்கே எழுச்சி நிகழ்வுகள் நடாத்தப்படுவதும், மிக நீண்ட நிகழ்ச்சியில் மக்களைக் கலைந்து போகாமல் வைத்திருப்பதற்கான ஒழுங்கு முறைகளும் மிக நீண்ட காலமாகத் தேசியத் தலைவர் அவர்களது அனுமதியுடனேயே நடாத்தப்பட்டு வந்தது. முள்ளிவாய்க்காலின் பின்னரும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.
- 2009 மாவீரர் தின உரையை சிங்கள அரசு தளபதி ராமின் மூலம் வெளியிட முனைந்திருந்தது. அது தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், 2010 மாவீரர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்தகைய பிறிதொரு நகர்வும் முறியடிக்கப்பட்டது. இதனால், மாவீரர் தினத்தில் எந்தச் சிதைவு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என்ற நிலையில், மாவீரர் தினத்தையே சிதைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காகவே, தேசியத் தலைவரையும் அவமானப்படுத்தும் விதத்தில் மாவீரர் தின நிகழ்வு குறித்துப் புதிய பல கேள்விகள் தமிழ்த் தேசிய சிதைவாளர்களால் கேட்கப்படுகின்றது.
கருணாவின் சதிக்குத் தெரிந்தோ, தெரியாமலோ கிழக்கின் போராளிகள் சிலர் அணி சேர்ந்தது போலவே புலம்பெயர் தேசங்களில் தொடரும் சிதைவு நடவடிக்கைகளிலும், இறுதிப் போர்க் களத்திலிருந்து வெளியேறிய முன்னாள் போராளிகள் சிலரும் தெரிந்தோ, தெரியாமலோ இந்தச் சதி நடவடிக்கைகளில் இணைந்துள்ளனர் என்பதும் புலம்பெயர் தேசங்களின் புதிய சோகமாக உள்ளது.
மாவீரர் தினம் என்ற தேசியத் தலைவர் அவர்களது ஈகச் சுடரேற்றும் புனித நினைவெழுச்சி நாள் தேசியச் சிதைவாளர்களால் சிதைக்கப்படுவதை அனுமதித்தோமானால், வடக்கையும் கிழக்கையும் பிரித்து தமிழீழத்தில் இரத்தக்குளியல் நடாத்திய சிங்கள தேசம் புலம்பெயர் நாடுகளின் தேசிய சிந்தனையையும் நிர்மூலமாக்கித் தனது முள்ளிவாய்க்கால் வெற்றியை முழுமைப்படுத்திவிடும்.
