திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம்

திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம்

நிலத்தில் திடீர் திடீரென்று தோன்றும் குழிகள்.. அதில் புதையல் இருப்பதாக உலா வரும் பேச்சுகள்.. மன்னர் காலத்து ரகசிய பாதாள அறைகள் இருப்பதாக சொல்லப்படும் விஷயங்கள்.. இவை ஒரு கிராமத்தையே ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது பட்டகப்பட்டி கிராமம். இங்குள்ள மாந்தோப்பில் இருந்துதான் இந்த பீதி கிளம்பியது. ஒரு ஏக்கர் பரப்புள்ள தோப்பை புல்டோசர் மூலம் சமப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது தோட்டத்தின் மைய பகுதியில் பிரமாண்ட கல் மேடை ஒன்று தட்டுப்பட்டது. சுமார் 50 அடி அகலத்தில் பாறை, சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்ட கல் மேடை. அதன் கட்டிட அமைப்பு வித்தியாசமாக இருந்தது. மன்னர் காலத்தில் கட்டப்பட்டதுபோல இருந்தது.

‘‘அரசர்கள் காலத்தில் கட்டிய மேடைக்குள் புதையல் இல்லாமல் இருக்குமா? கண்டிப்பாக தங்கம், வைரம் பொக்கிஷங்கள் இருக்கும்’’ என்று பரபரப்பாக பேசினர் மக்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த மைசூர் மன்னர் திப்பு சுல்தான், பெருஞ்செல்வத்தை உள்ளே புதைத்து மேலே பாதுகாப்புக்காக இந்த பிரமாண்ட கல்மேடையை அமைத்ததாகவும் பேசிக் கொண்டனர். ‘‘பட்டகப்பட்டி கிராமத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் தட்டக்கோட்டை மலை இருக்கிறது. அதன் உச்சியில் திப்பு சுல்தான் கோட்டை உள்ளது.



அங்கு தங்கியிருந்த கால கட்டத்தில்தான் கல் மேடைக்குள் திப்பு சுல்தான் பொக்கிஷங்களை புதைத்து வைத்தார்’’ என்றும் ஆதாரத்துடன் கூறினர் சிலர். பட்டகப்பட்டி கிராமத்தின் சுற்றுப்பகுதி முழுவதும் இத்தகவல் காட்டுத் தீயாக பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர். மாந்தோப்பு கல்மேடை பரபரப்பான பகுதியாக மாறியது. அதன் பின்னால் மறைந்திருக்கும் மர்மம் என்ன என்ற கேள்வி மக்களை ஆட்டி படைக்க தொடங்கியது.
இதற்கிடையில், கல்மேடை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 60 அடி தூரத்தில் மேலும் 3 கல்மேடைகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.

இதுபோல சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. நிலத்தை வெட்டியபோது திடீரென ஒரு பெரிய குழி தோன்றியது. அதில் இருந்து புகை கிளம்பியதால் மக்கள் பீதியும் திகிலும் அடைந்து ஓடினார்கள். புதையல் இருக்கலாம் என்ற ஆசையில் சிலர் தைரியமாக சென்று குழியை பார்த்தனர். குழியில் இருந்து இரும்பு ஆயுதம், எலும்புகள் வெளியே வந்ததால் அவர்களும் பீதியடைந்து ஓடினர். ‘‘ பேய், பிசாசு மற்றும் துர்மரணத்தை சந்தித்து பேயாக அலையும் ஆவி போன்றவற்றை மண்பானையில் போட்டு புதைத்து விடுவது வழக்கமாக இருந்தது. அப்படி ஒரு ஆவி மூடப்பட்ட மண் பானையைத்தான் உடைத்துவிட்டார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஆவி தற்போது வெளியே வந்துவிட்டது’’ என்று கூறுகிறார்கள் சிலர். இது அப்பகுதியினர் மத்தியில் பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நிலத்தில் குழி ஏற்பட்ட இடம், மூதாதையர்களை தாழியில் வைத்து புதைத்த இடம் என்று விளக்கம் தருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதுதொடர்பாக கோவை தொல்லியல் ஆய்வாளர் ஜெகதீசன் கூறுகையில், ‘‘விவசாய நிலங்களில் உள்ள நிலவறைகளில் முன்னோர்கள் தானியங்களை சேகரித்து வைப்பர். இதில் நகைகள் இருக்க வாய்ப்பு இல்லை. கோயில் நிலவறைகளில்தான் நகைகள் வைப்பர். ஏனென்றால் கோயில்கள்தான் அன்றைய காலங்களில் கருவூலமாக இருந்தன. கோயில் தவிர அரண்மனை கருவூலங்களில் பொக்கிஷங்கள் வைத்திருந்தனர். அந்த காலத்தில் கிடங்குகள் கிடையாது. அதனால் நிலவறைகளில் தானியங்களை புதைத்து விட்டு தேவை ஏற்படும் காலத்தில் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

இதன்மூலம் மழை, வெள்ளம், தீ போன்ற இயற்கை சீரழிவில் தானியம் அழிவது தவிர்க்கப்பட்டது. கற்கால சின்ன வகைகளில் தொப்பிக்கல் வகை என்று ஒன்று உண்டு. சங்க காலத்தில் இறந்தவர்கள் சடலத்தை கல் திட்டை, கல்படுக்கை, தொப்பிக்கல் நினைவுச் சின்னங்களில் புதைக்கும் பழக்கம் இருந்தது. பண்டைக்காலத்தில் இறந்தவருக்கு பிடித்த உணவுகள், பயன்படுத்திய ஆடை, ஆபரணங்கள், ஆயுதங்கள், ஆகியவற்றையும் மண் பாண்டத்துக்குள் சடலத்துடன் வைத்து புதைப்பர். ஆங்காங்கே தற்போது தட்டுப்படுபவை கற்கால எச்சங்கள்தான். எனவே இவற்றில் பொன், பொருள் புதையல் இருக்க வாய்ப்பில்லை’’ என்றார். ஆனாலும், கல்மேடையால் ஏற்பட்ட பரபரப்பும் ‘ஆவி குழி’ ஏற்படுத்திய பீதியும் அப்பகுதியில் இன்னும் ஓயவில்லை.
- நாச்சிபாளையம் கே.பூபதி

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item