மீண்டும் வெள்ளை வான் பீதி; மக்கள் அச்சத்தில்

vellavan
கொழும்பின் பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவர் நேற்றுப் பிற்பகலில் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப் பட்டார். வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டின் முன்பாகப் பட்டப் பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் கொழும்பில் பரபரப்பு ஏற்பட்டது.7 பேர் கொண்ட கும்பல் ஒன்றே இந்தக் கடத் தலில் ஈடுபட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.மின் உபகரண வர்த்தகரான இராமசாமி பிரபாகரன் (வயது 37) என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பெனிக்குயிக் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பாக நின்றிருந்த போது அவர் கடத்தப்பட்டார் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
 பதுளையைச் சேர்ந்தவரான பிரபாகரன் கொழும்பை மையமாகக் கொண்டு வணி கம் செய்து வந்தார். அவரது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்தால் யாரும் பதிலளிக்காமல் இருப்பதாக அவரது நண்பர்கள் உதயனுக்குத் தெரிவித்தனர்.
பிரபாகரன் ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டு 28 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி விடுவிக்கப்பட்டிருந்தார்.
தன்னைத் தேவையற்றுத் தடுத்து வைத்திருந்தமைக்காக 10 கோடி ரூபா இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையிலேயே அவர் கடத்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைக் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் விசாரணையின் பின்னர் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் சுமத்தப்படவில்லை. இந்தச் சதி முயற்சியில் ஈடுபட்டிருந்தார் எனக் கூறப்பட்டுக் கைது செய்யப்பட்டவரும் பிரபாகரனின் நண்பருமான இராணுவ அதிகாரி ஒருவர் இன்னமும் தடுப்புக் காவலில் உள்ளார்.
பிரபாகரனின் கடத்தலுக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். போரின் பின்னர் ஓய்வுக்கு வரும் என நினைத்த வெள்ளை வான் கடத்தல்கள் இன்றும் தொடர்வது அச்சத்தைத் தருவதாக உள்ளது என்று வெள்ளவத்தை வாசி ஒருவர் தெரிவித்தார்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item