சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்காவின் புதிய நகர்வு வரவேற்கதக்கது - நெதர்லாந்து வானொலி

சிறிலங்கா விடயத்தில் அமெரிக்காவானது தனது நலன் சார்ந்த வகையிலேயே நடந்து கொள்கின்றது என்ற பொதுவான கருத்து மேற்குலகம் முழுமைக்கும் பரவிக்காணப்பட்டது. ஆகவே இந்நிலையில், அமெரிக்காவின் இப்புதிய நகர்வானது இவ்வாறான தவறான அபிப்பிராயத்தை மாற்றுவதற்கான வரவேற்கத்தக்க விடயமாக அமைந்துள்ளது.

இவ்வாறு தெரிவித்ததாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்ததாக உலகளாவிய நெதர்லாந்து வானொலியின் [RNW] இணையதள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையின் அடுத்த கூட்டத் தொடரின் போது சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணை ஒன்றிற்கு அமெரிக்கா ஆதரவளிக்கவுள்ளது.

இதற்கு முன்னரும் அமெரிக்கர்கள் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்த போதிலும், இதுவரையில் சிறிலங்கா விவகாரத்தை மனித உரிமைகள் சபையின் முன் கொண்டு வருவதற்கான எந்தவொரு நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை.

அடுத்த மாதம் வோசிங்ரனில் சந்திக்கவுள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிலாரி கிளின்ரன் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே, சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கவுள்ளமை தொடர்பான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009 ல் நிறைவுக்கு வந்த, தமிழ்ப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தில் பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மார்ச் 2011ல் அமெரிக்க அரசாங்கம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

சிறிலங்காவால் சொந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற உள்ளக விசாரணைப் பொறிமுறையானது அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப அமையாவிட்டால், அனைத்துலக விசாரணை ஒன்றிற்கு சிறிலங்கா முகங்கொடுக்க வேண்டிவரும் என கடந்த ஆண்டில், அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான உதவிச் செயலர் றொபேற் ஓ பிளேக் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இது அனைத்துலக விமர்சனங்களிற்கு உட்பட்டுள்ளது. "இந்த அறிக்கையானது உண்மையில் மிகவும் மோசமான ஒன்றாகும்" என லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் Sri Lanka Campaign அமைப்பைச் சார்ந்த பிறெட் காவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

"இது யுத்த மீறல்களிற்குப் பொறுப்பானவர்களை இனங்கண்டு கொள்ளவில்லை. அடுத்ததாக, சிறிலங்கா அரசாங்கமானது இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கைகளை எடுக்கவும் தவறியுள்ளது. மிக அத்தியாவசியமாக உள்ள அடுத்த நகர்வு எடுக்கப்படவில்லை" எனவும் பிறெட் காவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையகத்தில் சிறிலங்காவிற்கு எதிராக பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதை திரு.காவர் வரவேற்றுள்ளார்.

"சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கர்கள் ஒருபோதும் மிகத் தீவிரமான, முக்கியமான முடிவை எடுக்கவில்லை. ஆகவே அமெரிக்காவின் இந்நகர்வானது புதியதாக உள்ளது. இதுவரையில் சிறிலங்கா விடயத்தில் அமெரிக்காவானது தனது நலன் சார்ந்த வகையிலேயே நடந்து கொள்கின்றது என்ற பொதுவான கருத்து மேற்குலகம் முழுமைக்கும் பரவிக்காணப்பட்டது. ஆகவே இந்நிலையில், அமெரிக்காவின் இப்புதிய நகர்வானது இவ்வாறான தவறான அபிப்பிராயத்தை மாற்றுவதற்கான வரவேற்கத்தக்க விடயமாக அமைந்துள்ளது" எனவும் திரு.காவர் குறிப்பிட்டுள்ளார்.

மீளிணக்கப்பாட்டு முயற்சி தோல்வியுறுவதானது உள்நாட்டு யுத்தம் மீளவும் ஆரம்பிப்பதற்கு வழிகோலும் எனவும் திரு.காவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"இவ்வாறான நிலைப்பாடானது அனைத்துலக தீவிரவாதத்தில் புதிய அலையைத் தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும் அல்லது ஐரோப்பாவில் நிதி சேகரிப்பிற்கு காலாக அமையும். இந்த உலகமானது சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கான நலனைக் கொண்டுள்ளதேயன்றி உள்நாட்டு யுத்தம் ஒன்றிற்கு மீளவும் செல்வதற்கான விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருப்திகரமான மீளிணக்கப்பாட்டு முயற்சிகளை நோக்கிய சிறிலங்காவின் நகர்வில் அனைத்துலக சமூகமானது திருப்திகொள்ளவில்லை என்பது தெளிவான நிலைப்பாடாகும் என அனைத்துலக நெருக்கடிகள் குழுவைச் சேர்ந்த அலன் கீனன் தெரிவித்துள்ளார். "மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவாலும், ஏனைய நாடுகளாலும் எடுக்கப்படும் சாதகமான, சாத்தியப்பாடான நகர்வுகள் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும்" என அலன் கீனன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் குறிப்பிடத்தக்க சில மேற்குலக நாடுகள், சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பில் தமது அழுத்தங்களை அதிகளவில் பிரயோகிக்காமல் உள்ளதற்கான காரணத்தை தன்னால் புரிந்து கொள்ள முடிவதாக அலன் கீனன் குறிப்பிட்டுள்ளார்.

"இவ்வாறான அதிக அழுத்தங்கங்கள் பிரயோகிக்கப்பட்டால், சிறிலங்காவில் உள்ள சமூகங்கள் மத்தியில் மேலும் அதிக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஆபத்துக்கள் உருவாகுவதுடன், ராஜபக்ச அரசாங்கத்தை இது மேலும் பலப்படுத்தியிருக்கும்" எனவும் அலன் கீனன் சுட்டிக்காட்டியுள்ளார்.

"மேற்குலகின் புதிய கொலனித்துவத்தின் வெற்றியானது, தனது வெற்றிக் கனிகளைத் திருடுவதற்கு முயற்சிப்பதாக" சிறிலங்கா அதிபர் ராஜபக்ச பரப்புரை மேற்கொண்டிருப்பர் எனவும் அலன் கீனன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் உண்மையில் இவ்வாறான அச்சமானது, குற்றம் ஒன்றை அனுமதிப்பதற்குப் போதுமான விவாதமாகக் கருதப்படவில்லை என அனைத்துலக நெருக்கடிகள் குழு தெரிவித்துள்ளது. "சிறிலங்காவின் இந்நிலைப்பாடானது அதன் முக்கிய நிர்வாகங்களான நீதி, காவற்துறை மற்றும் அரசியற் கட்சிகளை வலிவற்றதாக்கியுள்ளது. ஆகவே சிறிலங்கா விடயத்தில் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது" எனவும் திரு. கீனன் குறிப்பிட்டுள்ளார்.

"சிறிலங்காவிற்கு எதிராக பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டால், சிறிலங்காவில் வாழும் எல்லா சமூகங்களுக்குமான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கத்திற்கு மேலும் உந்துதல் அளிக்கும். ஆகவே மனித உரிமைகள் விவகாரம் முக்கிய விடயமாக உள்ளதால் அவை தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும். இவ் இலக்கை அடைவதற்கு மனித உரிமைகள் சபையில் எடுக்கப்படும் பிரேரணை ஒரு கருவியாக அமைந்திருக்கும்" என ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் சபைக்கான அமெரிக்கக் குழுவின் பேச்சாளர் டேவிட் கென்னடி தெரிவித்துள்ளார்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item