சிறிலங்கா அதிபரின் 'இரட்டை முகம்' வரலாற்றுப் பின்னணி கொண்டது - இந்திய ஊடகம்

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/makinthan.jpgசிறிலங்கா அரசாங்கமானது இரட்டை அர்த்தத்தில் பேசுகின்ற தனது பழைய வழக்கத்தை இன்னமும் கைக்கொள்கின்றது என்பதை அண்மையில் இத்தீவில் இடம்பெற்று வரும் அரசியற் திருப்பங்கள் மூலம் இனங்காண முடிகின்றது.
இவ்வாறு இந்தியாவை தளமாகக் கொண்ட Firstpost என்னும் இணையத்தள ஊடகத்தில் Venky Vembu என்பவரால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முழுவிபரமாவது,

சிறுபான்மை தமிழ் மக்கள் மற்றும் இந்தியாவுடனான தொப்புள்கொடி உறவைப் பேணும் அரசியலை மையமாகக் கொண்ட சிறிலங்காவின் நவீன வரலாறானாது உறுதிமொழிகளை நிறைவேற்றாமை, மொழி சார் அடக்குமுறை, பரஸ்பர அவநம்பிக்கைகள், போன்ற பல துரோகச் செயல்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

தமிழ்த் தாய்நாட்டைப் பெற்றுக் கொள்வதற்காக 30 ஆண்டு காலமாகப் போராடியவர்களும், உலகின் அதி மோசமான ஈவிரக்கமற்ற கொலையாளிகள் என வாதிடப்படுகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மே 2009 ல் தோற்கடிக்கப்பட்டமையானது, சிறிலங்கா அரசானது இது வரை காலமும் பின்பற்றிய தனது சித்திரவதைகளை உள்ளடக்கிய வரலாற்றிலிருந்து மீண்டு, நாட்டில் இறுதியான, நிலையான அரசியல் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை அதிகரிக்க வழிவகுத்தது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது இரட்டை அர்த்தத்தில் பேசுகின்ற தனது பழைய வழக்கத்தை இன்னமும் கைக்கொள்கின்றது என்பதை அண்மையில் இத்தீவில் இடம்பெற்று வரும் அரசியற் திருப்பங்கள் மூலம் இனங்காண முடிகின்றது. அத்துடன், இத்தீவில் பல ஆண்டு காலமாகத் தொடரப்படும் இன முரண்பாட்டை தீர்ப்பதில் சிறிலங்கா அரசாங்கமானது விருப்பங் கொண்டிருக்கவில்லை என்பதையும் அண்மைய அரசியற் சம்பவங்கள் பிரதிபலித்துக் காட்டுகின்றன.

குறிப்பாக, அரசியல் சாசனத்தின் 13 ம் திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கான அதிகாரங்களை வழங்குதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியற் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் இந்தியா மற்றும் சிறுபான்மை தமிழ் மக்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற அதிபர் தவறியுள்ளதையே அண்மைய நிகழ்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்குமாறு, இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் சிறிலங்காவிற்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா மீளவும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், 13ம் திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்துவதற்கான நகர்வுகளில் தனது ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் செலுத்துவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கிருஸ்ணாவிடம் உறுதியளித்திருந்தார்.

ஆனால் கடந்த வாரங்களில் சிறிலங்கா அதிபரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள், அரசியற் தீர்வொன்றை அடிப்படையாகக் கொண்ட 13வது திருத்தச்சட்டத்தை நிராகரிப்பதையே காட்டி நிற்கின்றன. ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றில், 13ம் திருத்தச் சட்டத்தின் சரத்துக்களை நிறைவேற்றுவதாக தான் இந்தியாவிடம் ஒருபோதும் தான் கூறவில்லை என அதிபர் தெரிவித்திருந்தமை இதற்கான முதலாவது எடுத்துக்காட்டாகும்.

"ஆகவே தங்களின் வாக்குறுதி தொடர்பாக இந்தியா அறிவித்திருந்த போது இந்தியத் தரப்பு இதில் பொய் கூறியுள்ளதென நீங்கள் கருதுகிறீர்களா?" என ராஜபக்சவிடம் வினவியபோது, இதற்கான பதிலை அவர் நேரடியாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், சிறிலங்காவில் உள்ள தமிழ் அரசியற்கட்சிகள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன் தமது பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துக் கூறவேண்டும் என அதிபர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"இறக்குமதி செய்யப்பட்ட தீர்மானங்களைச் சார்ந்திருப்பதன் மூலமும் வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்குகளைப் பயன்படுத்துவதன் ஊடாகவும்" தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது எனவும், இதற்குப் பதிலாக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவால் தேசிய மட்டத்தில் வரையப்படும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கடந்த சனிக்கிழமை அன்று இடம்பெற்ற சிறிலங்காவின் சுதந்திர தின விழாவில் கருத்துரையாற்றும் போது சிறிலங்கா அதிபர் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துக் கொண்டார்.

1987 ல் அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவாலும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியாலும் கைச்சாத்திடப்பட்ட இந்திய-சிறிலங்கா கூட்டு உடன்படிக்கையின் பரிந்துரைகளிற்கு அமைவாக உருவாக்கப்பட்ட 13ம் திருத்தச்சட்டத்தையே சிறிலங்கா அதிபர் 'இறக்குமதி செய்யப்பட்ட தீர்வுகள்' மற்றும் 'வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்குகள்' என மறைபொருளில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு விமான நிலையத்தில் ராஜீவ் காந்திக்கு வரவேற்களிக்கப்பட்ட போது சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த வீரர் ஒருவரால் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டார். இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற அதேநாளிலேயே, சிறிலங்கா விவகாரங்களில் இந்தியா தனது தலையீட்டை அதிகம் மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்கும் இந்திய – சிறிலங்கா கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. 1987ல் உருவாக்கப்பட்ட இவ் உடன்படிக்கையை சிங்களவர்கள் எதிர்த்து கலகங்களை மேற்கொண்டிருந்தனர்.

சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது மே 2009 ல் வெற்றி கொள்ளப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் யுத்த வெற்றியைப் பிரகடனப்படுத்திய சிறிலங்கா அதிபர், மாகாணங்களிற்கான அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணப்படும் என அறிவித்திருந்தார். இந்த அடிப்படையில், இத்திருத்தச் சட்டத்தின் சரத்துக்களுக்கு அப்பால் '13ம் திருத்தச் சட்டத்தின் மேலதிக சரத்துக்களையும்' சேர்த்துக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அதிபர் அறிவித்திருந்தார்.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிறுவப்பட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட பிராந்திய இறைமையைக் கொண்ட தன்னாட்சி உரிமை என்ற கோட்பாட்டைப் போலல்லாது, இதனைப் போன்று தமிழ் மக்களின் அவாவைத் தீர்த்துக் கொள்வதற்கான அதிகாரப் பகிர்வு முறைமையைக் கொண்டதாகவே இத்திருத்தச் சட்டம் அமைந்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை தடுக்கும் முகமாகவும் அது தொடர்பான விசாரணையிலிருந்து தப்புவதற்காகவுமே சிறிலங்கா அரசாங்கமானது 13ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான தனது வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.

தமிழீழக் கோரிக்கையை தற்போதும் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காக பல்வேறு வழிகளில் தம்மை அர்ப்பணித்துள்ள அரசியல் சக்திகள் உள்ள தமிழ் நாட்டில் கொந்தளித்துக் கொண்டிருந்த தமிழ் இனவாத உணர்வைத் தணிப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கமானது இந்திய அரசாங்கத்திடம் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பான வாக்குறுதியை வழங்கியிருந்தது.

1980 களில் இந்திய அரசாங்கம், விடுதலைப் புலிகளிற்கு ஆயுத மற்றும் தீவிரவாதப் பயிற்சிகளை வழங்கியிருந்தது. இதன் பெறுபேறாக மே 1991 ல் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி புலிகளின் தாக்குதலின் போது கொல்லப்பட்டார். இந்நிலையிலும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பலைகள் காரணமாக தமிழ் மக்களிற்கான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியாவிற்கும் சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களிற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதுடன், அவ்வாறான வாக்குறுதிகளைத் தான் வழங்கவில்லை என தெரிவிப்பதே ராஜபக்சவின் அண்மைய அரசியல் நகர்வாக உள்ளது.

இது சிறிலங்காவின் வரலாற்றில் புதிய விடயமல்ல. அதாவது சிறிலங்காத் தமிழர்களுக்கு பிராந்திய சபைகளின் ஊடாக தன்னாட்சி உரிமையை வழங்கும் நோக்குடன் 1957ல் உருவாக்கப்பட்ட பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கையிலிருந்து இன்று வரை சிறிலங்காவின் வரலாற்றில் இவ்வாறான ஏமாற்றுக்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை. சிறிலங்கா ஆட்சியாளர்கள் காலாதிகாலமாக இன, மொழி வேறுபாடுகளுக்கே தீனி போட்டு வளர்த்துள்ளனர். இவ்வாறானதொரு சூழலே தமிழ் பிரிவினைவாத அமைப்பு உருவாகக் காரணமாக அமைந்தது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும், சிறிலங்கா தமிழர்களுக்கு தன்னாட்சி மற்றும் சுயஅதிகாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு 55 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, சிறிலங்கா ஆட்சியாளர்கள் தாம் வழங்கிய எந்தவொரு வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item