சட்டசபையில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா!!

http://besttamillnews.blogspot.com/2012/02/3.html

கர்நாடக சட்டசபையில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கிய 3 அமைச்சர்கள், தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்தனர். ஆபாச பட விவகாரத்தில் அமைச்சர்கள் ராஜினாமா செய்திருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது.
சிந்தகி தாலுகாவில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக நேற்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் சவதி, செல்போனில் ஏதோ படம் பார்த்துக் கொண்டிருந்தார்.
அருகில் இருந்த பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல், விளையாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ண பலேமர் ஆகியோரும் அந்த காட்சியை பார்த்தனர்.
சட்டசபை நிகழ்ச்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்த தூர்தர்ஷன் கேமரா, அமைச்சர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை ‘ஜூம்’ செய்தது. அதில் மூவரும் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இந்த தகவல் பரவியதும் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி ஆகியோர் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
அமைச்சர்கள் ராஜினாமா கோரி அவர்கள் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. மகளிர் அமைப்புகளும் அமைச்சர்களுக்கு கண்டனம் தெரிவித்தன.
இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் லட்சுமண் சவதி, ‘‘சட்டசபையில் இருந்தபோது எனது செல்போனுக்கு ஒரு எம்எம்எஸ் செய்தி வந்தது. வெளிநாட்டில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகள் அதில் இருந்தன. ஆபாச காட்சி எதையும் நான் பார்க்கவில்லை. இதற்காக ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை’’ என்றார்.
இதற்கிடையே, உ.பி.யில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ. தேசிய தலைவர் நிதின் கட்கரி, முதல்வர் சதானந்த கவுடாவுடன் நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக பேசினார். பிரச்னையின் தீவிரம் குறித்தும், அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
சதானந்த கவுடாவை தொடர்ந்து மாநில பா.ஜ. தலைவர் ஈஸ்வரப்பாவுடனும் கட்கரி ஆலோசனை நடத்தினார். இன்று காலை முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில பா.ஜ. தலைவர் ஈஸ்வரப்பா மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் சதானந்த கவுடா ஆலோசனை நடத்தினார்.
அப்போது, சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்களை பதவி விலகச் சொல்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆபாச பட சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள் லட்சுமண் சவதி, சி.சி.பாட்டீல், கிருஷ்ண பலேமர் மூவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
ராஜினாமா கடிதங்களை முதல்வரிடம் அவர்கள் சமர்ப்பித்தனர். அதை ஏற்றுக் கொண்ட முதல்வர் சதானந்த கவுடா, கடிதங்களை கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளார்.