அடுத்து ஜெர்மனி சாட்டிலைட் பூமியில் விழும் அபாயம்.??
நாசா அனுப்பிய யுஏஆர்எஸ் செயற்கை கோள் செயலிழந்து பூமியில் விழுந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஜெர்மனி அனுப்பிய செயற்கை கோள் விரைவில் பூமியில் விழும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா அனுப்பிய 6 டன் கொண்ட யுஏஆர்எஸ் என்ற செயற்கை கோள், செயலிழந்து பல துண்டுகளாக உடைந்து கடந்த வாரம் பூமியில் விழுந்தது. பசிபிக் கடல் பகுதியில் துண்டுகள் விழுந்ததால் பூமிக்கும் மனிதர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
இந்நிலையில் ஜெர்மன் அனுப்பிய செயற்கை கோள்”ரோசாட்” செயலிழந்து இப்போது பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜெர்மனி விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஹெய்னர் கிளின்கிராட் கூறுகையில், “கடந்த 90ம் ஆண்டு ரோசாட் விண்ணில் ஏவப்பட்டது. இது இரண்டரை டன் எடை கொண்டது. 98ம் ஆண்டு செயலிழந்தது.
இந்த செயற்கை கோள் 30 துண்டுகளாக சிதறி உள்ளது. இந்த துண்டுகள் எங்கு விழும், எந்த நேரத்தில் விழும் என்று துல்லியமாக கணிக்க முடியவில்லைÕÕ என்று தெரிவித்துள்ளார். ஜெர்மனி செயற்கை கோள் துண்டுகள் பூமியில் விழுவதால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது.

