நரிக்குறவர் நாயகி!
https://besttamillnews.blogspot.com/2013/12/blog-post_5050.html
நரிக்குறவர்கள் என்றாலே தகர டப்பா, 'சாமியோவ்’ பாஷை என்று காட்டுவதுதான் தமிழ் சினிமா வழக்கம். வெறும் கேலிப்பொருளாக மட்டுமே அவர்களைக் காட்டும் தமிழ் சினிமாவில் ஒரு நரிக்குறவப் பெண்ணை ஹீரோயின் ஆக்குவது ஆச்சர்யம்தானே! அதுவும் கட்டுப்பாடுகளுக்குப் பிரபலமான நரிக்குறவர் சமூகம் ஒரு பெண்ணை ஹீரோயினாக நடிக்க அனுமதிப்பது அதைவிட ஆச்சர்யம். இப்படிப் பல ஆச்சர்யங்களை நடத்திக் காட்டியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த வி.பி.செந்தில்குமார். இவர் இயக்கும் 'மதுரை விடிஞ்சா போச்சு’ படத்தின் ஹீரோயின் நிவேதா, ஒரு நரிக்குறவப் பெண். படத்தின் ஆடியோ ரிலீஸையும் நரிக்குறவ சமூகத்தினரை வைத்தே மதுரையில் நடத்தினார்.
''நான் மதுரையில் செல்லூரைச் சேர்ந்தவன். படிக்கிற காலத்திலிருந்து மதுரையைச் சுற்றி வசிக்கும் நரிக்குறவ மக்களைக் கவனித்துவருபவன். அவர்கள் ஒரு நிமிஷம் கூட சும்மா உட்கார்ந்திருந்து பார்த்தது இல்லை. அவ்வளவு சுறுசுறுப்பு. காலம் எவ்வளவு மாறினாலும் அவர்கள் பாரம்பரியமாகக் கடைப்பிடித்துவரும் பழக்கங்களை மட்டும் விடாமல் கட்டிக்காத்துவருகிறார்கள். ஆரம்பத்தில் நான் குறும்படங்கள் எடுத்தேன். அதன்பின் சென்னையில் சில இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்தேன். நான் எழுதி வைத்திருந்த கதையைப் படமாக்க நினைத்தபோது, நரிக்குறவப்பெண்ணைக் கதாநாயகியாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அது அவ்வளவு எளிதாக இல்லை. பரமக்குடி, சிவகங்கை, திருவண்ணாமலை, தருமபுரி போன்ற ஊர்களிலுள்ள நரிக்குறவர் குடியிருப்புகளில் போய்ப் பேசிப் பார்த்தேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக மாதக்கணக்கில் அவர்களுடனே தங்கி, அவர்கள் வீட்டில் சாப்பிட்டும் பிரயோசனம்இல்லை. பட ஷூட்டிங்கைத் துவங்க, மற்ற எல்லாம் தயாராக இருந்த நிலையில், என் கனவுக் கதாநாயகி கிடைக்காததால் தாமதமாகிக்கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் திருச்சியில் நிவேதாவைப் பார்த்தேன்.
பெரிய போராட்டத்துக்குப் பிறகு என் ஆர்வத்தைப் பார்த்து நிவேதாவின் அப்பா சம்மதித்தார். இதைப் பார்த்து என் படத்தின் இரண்டாவது நாயகி கேரக்டரில் நடிக்க வினோதினி என்ற பெண்ணையும் அவர் பெற்றோர் அனுப்பினார்கள். இதனால், அந்த காலனியிலிருந்த அவர்களுடைய பஞ்சாயத்தில் இந்த இரண்டு குடும்பத்தையும் ஊர் விலக்கம் செய்துவிட்டார்கள். நாங்கள் அந்தப் பகுதியிலேயே படப்பிடிப்பை நடத்தியதாலும் அவர்களைக் கண்ணியமாக நடத்தியதைப் பார்த்தும் திருச்சி தேவராயனேரி காலனி நரிக்குறவ மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தார்கள். அதன்பின், துணை நடிகர்களாக நடிக்க நிறையப் பேரை அங்கிருந்தே செலக்ட் செய்தோம். படத்தில் அவர்களுக்கு வித்தியாசமான கேரக்டர்களைக் கொடுத்திருக்கிறோம். இப்போது படம் முடியும் தருவாயில் உள்ளது. பொங்கலுக்கு வருகிறது. அதற்குப் பின் பாருங்கள். படம் பெரிய அளவில் பேசப்படும். நிவேதா ரொம்பப் பிரபலமாகிவிடுவார்.'' என்றார் உற்சாகமாக.
கதாநாயகி நிவேதாவிடம் பேசினேன். ''எனக்கு சினிமா பிடிக்கும். பல கட்டுப்பாடுகள் இருந்தாலும் நம்ம புள்ளை சினிமாவுல நடிச்சு புகழ் பெறட்டும்னு எங்க மக்கள் இப்ப ஆசைப்பட ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கும் சந்தோஷமா இருக்கு'' என்கிறார்.

