இலங்கையின் போர்க் குற்றங்களை மன்னிக்க முடியாது! பாக். பத்திரிகை வலியுறுத்து!!
https://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_20.html
இலங்கை அமைதியை அடைந்தது எப்படியாக இருந்தாலும் அதன் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது, போர்க் குற்றங்களைப் புரிந்தவர்கள் அனைத்துலகச் சட்டங்களின்படி பொறுப்புக் கூறுதல் அவசியம் என்று பாகிஸ்தானின் பிரபல நாளேடுகளில் ஒன்றான டோன் கருத்து வெளியிட்டு உள்ளது.
"மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்' என்ற தலைப்பில் டோனில் நேற்று வெளியான ஆசிரியர் தலையங்கத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு
இலங்கையில் அமைதி ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அவ்வமைதியை அடைய நேர்ந்த இழப்புகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இலங்கை முன்னெடுத்த போர் ஒட்டுமொத்த அனைத்துலக சட்டங்களின் மீதும் தொடுக்கப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் என்று ஐ.நா மேற்கொண்ட பூர்வாங்க விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட உள்ளது.
போர் நடந்து கொண்டிருந்த 2009 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கைப் படையினர் கண்மூடித்தனமான முறையில் குண்டுகளையும் எறிகணைகளையும் வீசியமை போர் முடிவுக்கு வந்த பின்னர் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் காணொலிப் பதிவுகள் மூலம் வெளியே தெரிய வந்து உள்ளது
இலட்சக்கணக்கான மக்கள் தீவின் வடக்கில் உள்ள மிகச் சிறிய பகுதி ஒன்றுக்குள் சிக்கியிருந்தபோது கொல்லப்பட்டனர்.
இறுதி ஐந்து மாதங்களில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளும் கூட மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளனர்.
அவர்கள் போர் வலயத்தில் இருந்த பொதுமக்களை வெளியே செல்ல விடாமல் தடுத்தமையுடன் மனித கவசங்களாகவும் பாவித்தனர்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் உயிர் பிழைத்த 2 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் பிரமாண்டமான அகதி முகாமுக்குள் தடுத்து வைக்கப்பட்டனர். உலகின் மிகப் பெரிய தடுப்பாக எந்த நீதி விசாரணையுமின்றி போராளிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட 11000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், கூட்டாக பாலியல் வல்லுறவு போன்றன போரின் பிந்திய மாதங்களில் தொடர்ந்தன எனத் தமிழர்கள் சொல்கிறார்கள்.
அதேவேளை இலங்கை சொந்தமான ஒரு விசாரணையை நடத்தியது. அது போராளிகளை மையப்படுத்தி மட்டுமே குற்றம் சாட்டியுள்ளது என்றும் இராணுவத்தின் பங்கு பற்றிக் குறிப்பிடவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.
ஆனால் அனைத்துலகச் சட்டங்களின்படி பொறுப்புக் கூறுதல் அவசியமானது.
போர்க் காலங்களில் உரிமைகளை மீறும் வகையில் குற்றங்களை புரிந்த குற்றவாளிகள் நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும்.
பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் நாட்டைப் பாதுகாக்க ஆயுதப் போராட்டங்களை நடத்துவது தவிர்க்க முடியாதது என்று கருதுகின்றன.
அமைதியை அடைந்தது எப்படியாக இருந்தாலும் அது விமர்சன முக்கியத்துவம் வாய்ந்தது.
எந்த விடயத்திலும் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் சகித்துக் கொள்ளப்படமாட்டாது.
