போர்க் குற்ற விசாரணைக்கு அவுஸ்திரேலியா பகிரங்க அறிவிப்பு!
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_9375.html
சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு அவுஸ்திரேலியா பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளது.
சிறீலங்காப் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து முழு அளவிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று அவுஸ்திரேலியா நேற்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.
சிறீலங்காக்கு எதிராகச் சுமத்தப் பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டு மென்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் நிலையிலும், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டி ருக்கின்றது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டுக்கு முன்னோடியாக இடம்பெறும் வர்த்தக மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் அவுஸ்திரேலியாவின் ஒத்த எண்ணப்பாடுகளைக் கொண்ட உலக நாடுகள் கூறுவதைப்போல, போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் முழு அளவில் நடைபெறவேண்டும் என் பதை அவுஸ்திரேலியாவும் வலியுறுத்துவதாகச் சுட்டிக்காட்டினார்.
சிறீலங்காக்கு எதிராகப் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென வலியுறுத்தி தமது நாட்டில் தீவிர அழுத்தங்கள் வந்துள்ள நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இறுதி யுத்த கால கட்டத்தில் இடம்பெற்ற தீவிரமான குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.
போர்க்குற்றங்கள் சம்பந்தமான நீதியான விசாரணை நடக்காத பட்சத்தில் 2013 ஆம் ஆண்டில் சிறீலங்காவில் நடை பெறவுள்ளதாகக் கருதப்படும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டைப் பகிஷ்கரிக்க வேண்டிவருமெனவும் கனடா எச்சரித்திருந்தது.
போர்க்குற்றச்சாட்டுகளை முற்றமுழுதாக நிராகரிக்கும் சிறீலங்கா அரசு, 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய அமைப்பு இந்த விவகாரத்தினால் பிளவுபட்டுவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
