உங்களுக்கு பிடித்தமான பாடல் வரிகளை தேடுவதற்கான தளம்
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_8256.html
பனியில்லாத மார்கழியா என்பது போல பாடல் வரியை பகிர்ந்து கொள்ளாதவர் எல்லாம் ஒரு பேஸ்புக் பயனாளியா என்று கேட்கிறது மியூசிக்கோ இணையதளம். லிரிக்ஸ் ஸ்டேடஸ் இணைய சேவைக்கான அறிமுகத்தில் தான் இந்த தளம் இப்படி குறிப்பிடுகிறது. அடிப்படையில் லிரிக்ஸ் ஸ்டேடஸ் பாடல் வரிகளுக்கான தேடியந்திரம். ஆனால் பேஸ்புக்கை மையமாக கொண்டது. இதில் வரிகளை தேடலாம், தேடிய கையோடு பேஸ்புக்கில் அதனை பகிர்ந்து கொள்ளலாம் பேஸ்புக்கில் அப்போதைய மனநிலையை பகிர்ந்து கொள்ளும் போது எப்படி உணர்கிறோம் என்பதை இசைமயமாக உணர்த்த நினைப்பவர்களுக்கானது இந்த சேவை.
அப்படி செய்யும் வழக்கம் இல்லாதவர்களும் இருக்கின்றனரா என்ன?(இதுவும் மியுசிக்கோவில் வரும் குறிப்பு) யோசித்து பார்த்தால் எல்லாமே இசைமயமானது தான். சந்தோஷமாக இருக்கும் போது நாம் அதற்கேற்ற பாடலை முணுமுணுப்பது இல்லையா? அதே போல ஒவ்வொரு மனநிலைக்கேற்ற பாடல்களையும் பாடுவது தான் இல்லையா? என்ன சூழ்நிலைக்கு தான் தமிழில் பாடல்கள் இல்லை. எந்த மனநிலையில் இருந்தாலும் சினிமா பாடல்களை பாடி மனதை வெளிப்படுத்தி கொள்ளலாம். இதே போலவே பேஸ்புக்கிலும் மனதில் உள்ளதை சில நேரங்களில் பாடல் வரிகளாகவே வெளிப்படுத்தலாம் அல்லவா?
மகிழ்ச்சியை வெளிப்படுத்த இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ என்ற வரிகளை போடுவது இசைமயமாக தானே இருக்கும். ஆனால் இதில் உள்ள ஒரே சிக்கல் பாடல் வரிகளை பிழையில்லாமல் சரியாக மேற்கோள் காட்டுவது தான். வார்த்தைகள் மாறிவிட்டால் அர்த்தம் மாறிவிடலாம். நண்பர்களும் வறுத்தெடுத்துவிடுவார்கள்.
இது போன்ற நேரங்களில் சரியான பாடல் வரிகளை தேடுவதற்காக என்றே லிரிக்ஸ் ஸ்டேடஸ் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மனதில் உள்ள பாடலை இந்த தேடியந்திரத்தில் டைப் செய்து தேடினால் அந்த பாடல் வரிகள் வருகிறது. அதை அப்படியே கிளிக் செய்து பேஸ்புக்கில் பகிரலாம். தேவைப்பட்டால் முழு வரிகளையும் இணைக்கலாம். பாடல், பாடியவர் என்று இரண்டையுமே குறிப்பிட்டு தேடலாம். ஏற்கனவே தேடப்பட்ட வரிகளையும் அவற்றில் பிரபலமாக உள்ளவற்றையும் பார்க்கலாம். எல்லாவற்றுக்கும் தனி பட்டியல் உள்ளது. நாமும் பாடல்களை சமர்பிக்கலாம். நமக்கான பாடல்களை கோரலாம். பாடல் வரி தேடியந்திரங்களிலேயே மிகவும் வித்தியாசமானது.
SITE:- http://www.lyricstatus.com/
