யாழ்ப்பாணத்தில் பெண்களிடம் மாட்டுப்பட்ட அப்பாவிக் கிறீஸ் மனிதன்!
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_30.html
இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஒரு தசாப்த காலத்துக்கு மேல் வசித்து வருகின்ற யாழ்ப்பாண தமிழர் ஒருவர் உறவினர் வீட்டு திருமண வைபவம் ஒன்றுக்காக சொந்த கிராமத்துக்கு சென்று இருந்த நாட்களில் கிறீஸ் மனிதன் என்கிற சந்தேகத்தில் பெண்களின் வாங்கிக் கட்டிய சம்பவம் ஒன்று சில வாரங்களுக்கு முன் இடம்பெற்று உள்ளது.
இவரது ஊர் அரியாலை. திருமண வீட்டார் சங்கக் கடையில் சீனி வாங்கி வரச் சொல்லி பட்டப்பகலில் இவரை அனுப்பி இருக்கின்றனர்.
இவர் பழைய ஞாபகத்தில் சங்கக் கடை முன்னைய நாட்களில் இருந்த வீட்டுக்கு சென்று விட்டார். புதிய சங்கக் கடையோ இதற்கு அடுத்த வீட்டில்தான் இருந்தது.
பிழையான வீட்டுக்குள் புகுந்தவர் உள்ளே பிரவேசித்து இருக்கின்றார். வீட்டுக்காரரின் இளைய புதல்வி அரவம் கேட்டு எழுந்தார்.
அன்னியன் ஒருவரை கண்டமையால் திகில் அடைந்தார். ஆளை அடையாளம் கண்டு இருக்கவில்லை. இவரின் கையில் இருந்த பையை பார்த்தார்.
பைக்குள் கிறிஸ் கத்தி இருக்கின்றது என முடிவெடுத்து விட்டார். கிறிஸ் மனிதன், கிறிஸ் மனிதன் என்று கத்தியபடி இவரை முழுப் பலத்தையும் பிரயோகித்து அறை ஒன்றுக்குள் தள்ளினார்.
இவ்வீட்டுக்கார அம்மாவும், மூத்த மகளும் சத்தம் கேட்டு வந்து கிறிஸ் மனிதனை மடக்குகின்ற நடவடிக்கையில் வெகு ஜாக்கிரதையாக ஈடுபட்டு இருந்தனர்.
இதற்கு இடையில் இந்த அப்பாவி மனிதன் சொந்த அடையாளத்தை வெளிப்படுத்த முயன்று இருக்கின்றார். இவ்வீட்டுக்கார அம்மாவின் பெயரை சொல்லி அடையாளம் தெரியவில்லையா? என்று கேட்டு இருக்கின்றார்.
வீட்டாரின் எல்லாத் தகவலையும் அறிந்து வந்திருக்கின்றான் இக்கிறீஸ் மனிதன் என்று வீட்டுக்கார அம்மா முடிவெடுத்து நன்றாக திட்டித் தீர்க்கலானார்.
வெகு நேரத்தின் பின் அப்பாவி மனிதர் சொந்தப் பட்டப் பெயரைச் சொல்லி இருக்கின்றார். இவரை அம்மா ஒருவாறு அடையாளம் கண்டு விட்டார். எல்லாருமாக இவரிடம் மன்னிப்புக் கோரினர். இவரை விடுதலை செய்தனர்.
