காதலர் தினம்... கவனத்தை சிதறடிக்கும் காலம்
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_2620.html
மேலும் சிலர் இந்த நாளை வைத்து என்ன நடக்குமோ? என்ற அச்சத்துடனும் காணப்படுகின்றனர். இந்த நாளைப் பற்றி பலவிதமாக பேசுபவர்கள் இருக்கிறார்கள்.
காதலர் தினம் யுவன்கள்- யுவதிகளை சங்கடப்படுத்துகிறதா?
இந்த தேசத்தின் துடிப்பான வாலிபர்கள், நாணிக் கோணி மலர்க்கொத்து நீட்டும் அசடுகளாகவும், இயந்திரத்தனமாக வாழ்த்து அட்டை விநியோகிக்கும் வாத்துகளாகவும், தங்கள் திராணியற்ற தன்மையை எண்ணி அசைபோடும் முட்டாள் காளைகளாகவும் ஆக்கி, வேடிக்கை பார்க்க மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் போட்ட திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருப்பதைக் கொண்டாடும் தினம் என்று சொல்லலாமா?
மதிப்பையும், வசீகரத்தையும், தங்கள் வாழ்க்கையின் சாராம்சத்தையுமே ஒரு சில மலர்க் கொத்துக்களும், வாழ்த்து அட்டைகளும், பாசாங்குப் பேச்சுகளும் தீர்மானிப்பதாக யுவதிகளை மறுக வைக்கிறது. அதே நுகர்வு மந்திரவாதிகள் விரித்த மாயவலையில் கிளிகள் சிக்கிக் கொண்டதைச் சொல்லும் தினம் என்று சொல்லலாமா? ஆதரவும், அவலமும் எது எப்படி இருந்தாலும், இந்த காதலர் தினத்திற்கு யுவன்- யுவதிகள் மட்டத்தில் எப்போதுமே ஒரு வித ஆதரவுத் தளம் இருந்து கொண்டே இருக்கிறது.
இவ்வாறு ஆதரிப்பவர்கள் இந்து மதம், வேதகாலம் தொட்டு காதலை அங்கீகரித்து வந்ததை ஆதாரமாக காட்டுகிறார்கள். ஆனால், இப்படி ஒரு தினம் வேதகாலத்தில் இருந்ததா? என்று கேட்டால் சிக்கல் தான். ஆனால், சில கல்லூரிகளில், சில சித்திரவதைகளும் காதலர் தினத்தை வைத்து நடப்பதாகத் தெரிகிறது. அது என்ன தெரியுமா?
இருபாலருக்கும் இடையில் இயல்பான, ஆரோக்கியமான, பாலியல் சாராத அதே சமயம் ஆர்வமூட்டுகிற நட்புகளைப் புரிந்துகொள்ளவோ, ஊக்குவிக்கவோ இன்னும் முழுமையாகத் தயாராகாத ஒரு சமூகத்தில், காதலர் தினத்தின் வருகை வருடாந்திர வெள்ளத்திற்குத் தான் ஒப்பிடத் தோன்றுகிறது.
அடங்கி இருந்த ஆறு, கரையை உடைக்கிறது. அதன் பக்கவிளைவுகள் எப்போதுமே துயரம் தரக் கூடியவை. மேலும், அவற்றை எப்போதுமே நாம் தவறில்லாமல் கணித்து விடவும் முடியும்.
இது என்ன சுயம்வரமா?
நகரங்களில் வசிக்கும் உயர்பள்ளி மாணவர்களுக்கு இந்த திகில் ஜனவரி மாதக் கடைசியிலேயே ஆரம்பித்து விடுகிறது என்று தோன்றுகிறது. பருவம் துளிர்விடும் அந்த வயதில், இயல்பாக வரும் உணர்ச்சிகளை, அவற்றின் இயல்பான போக்கில் கையாள விடுவது நல்லது.
ஆனால் இந்தத் தினம் வந்துவிட்டால், அன்று தனது காதலியை தெரிவு செய்து அனைவர் முன்னிலையிலும் முரசறைய வேண்டிய கட்டாயத்துக்கு ஒவ்வொரு பையனும் ஆளாகிறான். அப்படிச் செய்யவில்லையென்றால் அவனது சுயமதிப்பே கேள்விக் குறியாகிவிடும் அபாயம்! முயற்சியில் தோல்வி என்றால், என்ன ஆகும் என்று சொல்வதற்கில்லை.
மூன்று நான்கு பேர் தன்னை காதலி என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற தர்ம சங்கட குழப்பத்தில் வேறு சில பெண்களும், வரும் காதல் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று சில பெண்களும் இருக்கிறார்கள். ஆக, பையன்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, எவ்வளவு பெரிய கொடுமை, சித்ரவதை இது.
மாறாத சிந்தனைகளும்.. மயக்கங்களும்
அதுவும் இந்தப் பையன்கள் எல்லாரும் மேற்கத்திய சூழலில் வளர்பவர்களல்ல, தான் “காதலிக்கும்” பெண்ணை கைவிடாமல் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒருவிதமான சராசரி தமிழ் இந்துக் குடும்ப மனநிலையுடன் வளர்க்கப்பட்டவர்கள்.
எதிர்ப்படும் பெண் சிந்தும் ஒரு நொடிப் புன்னகைக்கான ஒரே எதிர்கால சாத்தியம் டூயட்-தாலி- மேளம் என்பது போன்ற ஒருவித மனச்சித்திரத்தை திரைப்படம், ஊடகங்கள் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் பார்க்கும் நிகழ்வுகளின் மூலம் உருவாக்கிக் கொண்டவர்கள்.
மேலும் சொல்லப் போனால், வேலண்டைன்ஸ் டே என்பது ஒரு ”நட்புப் பரிமாற்றம்” என்று பிரசாரம் செய்யும் ஊடகங்களே ஒரு குழம்பிய மனநிலையில் தான் இருக்கின்றன. பல்வேறு ஊடகங்களிலும் கப்பி லவ்வேஸ் டே என்று போட்டு கல்யாணப் படம் போடுவதையும் நாம் பார்க்கலாம்.
தங்கள் எதிர்பாலாரின் நட்பை எப்படி? ஏந்த வகையில் பேணுவது என்ற குழப்பம் எல்லா யுவன்கள், யுவதிகள் மனங்களிலுமே இருக்கிறது. அது காலப் போக்கில் தன்னியல்பில் தீரும், அது தான் நல்லதும் கூட.
ஆனால் வேலண்டைன்ஸ் டே இந்த விடயத்திற்கு ஒரு வருடாந்திர தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற தேவையில்லாத அழுத்தத்தை உருவாக்குகிறது.. இத்தகைய இயல்பான உறவுகளின் நெகிழ்வுத் தன்மையைக் குலைக்கிறது என்று நினைக்கிறேன்.
ஒரு உறவை girl friend என்று சட்டென்று முடிவெடுக்க வேண்டும். கஷ்டகாலம், Girl Friend என்று சொல்லிவிட்டால் அது சாதாரண விடயம் அல்ல, மேலே சொன்னமாதிரி பெரிய நீண்டகாலக் கொக்கி பற்றிய கற்பிதங்களுக்கே அது இட்டுச் செல்லும். அதனால் தான் “வேலண்டைன்ஸ் டே” அன்று நிராகரிப்பு விகிதங்களும் மிக அதிகமாக இருக்கின்றன. எந்தப் பெண் இப்படி வேண்டாத
கற்பனைக் கொக்கிகளில் மாட்டிக் கொள்ள நினைப்பாள்?
கற்பனைக் கொக்கிகளில் மாட்டிக் கொள்ள நினைப்பாள்?
அதனால் பெப்ரவரி வந்துவிட்டாலே நம் நாடுகளில் (இந்தியா, இலங்கை) கல்லூரி இளைஞர்கள் ஒருவித பரபரப்புடனே காணப்படுகிறார்கள். பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. மந்தையில் ஒட்டாமல் இஷ்டப்பட்டதை செய்வேன் என்று இருப்பவர்களே இந்த “மைய நீரோட்டத்திலிருந்து” தப்பிக்கிறார்கள். அவர்களுக்கும் ஏகப்பட்ட அழுத்தங்கள், மன உளைச்சல்கள் ஒரு வித தனிமை
உணர்வு எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டி வருமே.
உணர்வு எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டி வருமே.
கல்லூரிப் பருவத்தின் “காயங்கள்” அப்படியே பல்கலைக்கழகத்திலும் தொடர்கின்றன. சில பையன்கள் பெண்களுடன் ஒரு உரையாடலை நிகழ்த்துவதற்கே சங்கடப்படுகிறார்கள். அசடு வழிகிறார்கள்.
காயங்கள் ஏற்படுத்தும் காலம்.
காயங்கள் ஏற்படுத்தும் காலம்.
நம் நாட்டிலுள்ள சில கல்லூரிகளில் பெப்ரவரி முதல் இரண்டு வாரம் கறாரான கண்காணிப்புகள் இருக்கின்றனவாம். ஆண்-பெண் ”தொடர்பு”கள் புன்னகைகள் சின்ன உரையாடல்கள், சேர்ந்து சிரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடன் அழைத்துச் சென்று கடுமையாக எச்சரித்து அனுப்புவார்களாம்! ”காதலர் தினம்” எங்கிருந்து எங்கு நம்மைக் கொண்டுவந்து விட்டுவிட்டது பாருங்கள்!
இப்படி எல்லாம் இருந்தாலும், காதலர் தினத்தை முற்றுமாக எதிர்ப்பதும், காதலைச் சாடுவதும் மிகவும் தவறானது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.
காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலன்டைன் என்ற பெயருடைய கிறிஸ்தவ பாதிரியார் எரித்துக் கொல்லப்பட்டதாகவும் அவரது நினைவாகவே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. பிற்கால மேலைத்தேய ஆதிக்க வாதத்தின் விளைவே இது என்று சொல்வோரும் உள்ளனர்.
காமன் / ஹொலிப் பண்டிகை (தமிழ்- இந்து மரபில் காதலர் தினம்)
இந்து மரபில் காமன் பண்டிகை கொண்டாடும் வழக்கம் இருக்கிறது.. அதனை இந்த காதலர் தினத்துடன் ஒப்பிட்டுப் பேசுவர். மாசி மாதத்துப் பூரணையை அடுத்து ஆரம்பமாகும் இப்பண்டிகை பங்குனிப் பூரணையுடன் நிறைவடையும் என்று குறிப்பிடப்படுகிறது.
தமிழ் நாட்டுக் கிராமங்களில் இன்னும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் காமன் பண்டிகையின் போது ‘காமன் கூத்து’ ஆடப்படுகிறது. இக்கூத்தில் சிவபெருமான் காதல் தெய்வமான மன்மதன் என்ற காமனை எரித்த வரலாறு கூத்தாக நடத்திக் காட்டப்படுகிறது. இலங்கையின் மலையகத்திலும் இக்கூத்து இக்காலத்தில் ஆடப்படுகின்றமையைக் காணலாம்.
அகநானூற்றில் ”பங்குனி முயக்கம்”, “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” (பா 368) என்றும், கலித்தொகையில் ”மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து... விளையாடும் வில்லவன் விழவு” (35:13-14) என்றும் குறிப்பிடப்படுகின்ற காமன் பண்டிகையே சங்ககாலக் காதலர் தினம் எனத் தெரியவருகிறது.
இன்றைக்கும் வட இந்தியாவில் ‘ஹொலி’ப்பண்டிகை என்று இக்காலத்தில் காமன் பண்டிகையாகிய காதல் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.
காமனுக்கு அனங்கன் என்றும் பெயருண்டு. சிவன் தவம் செய்துகொண்டிருந்தபோது, அத்தவத்தைக் கலைப்பதற்காகச் சிவன்மீது காதல் உணர்வுகளை ஏற்படுத்தும் கணைகளை மன்மதன் தொடுத்தமையால் தவம் கலைந்த சிவனுடைய நெற்றிக்கண்ணின் கதிர்வீச்சுக்குக் காமன் பலியானான்.
அதனால் அவனுக்கு அங்கம் (உடல்) இல்லாதவன் என்று பெயர் வந்ததாக விளக்கம் கூறப்படுகிறது. காளிதாசனின் குமாரசம்பவம் இந்த விளக்கத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
தமிழ் இலக்கியங்களில் உருவிலி என்ற பெயரால் மன்மதன் குறிப்பிடப்பட்டுள்ளான். காதல் உணர்வு என்பது எவ்வாறு இருபாலார் மனதிலும் விதைக்கப்பட்டு வேர்பிடித்து வளர்கிறது என்பது எளிதில் கணித்துச் சொல்லமுடியாத ஒன்றாக இருப்பதாலும் இத்தகைய உணர்வுக்குக் காரணமான தெய்வத் தத்துவத்தை உருவிலி என்றும் அனங்கன் என்றும் குறிப்பிட்டிருக்கக்கூடும்.
மேலைத்தேய திணிப்புகளிலிருந்து விடுபடுவோம். காதலை நேசிப்போம்
இன்றைய வணிக மயமான சூழலில் ஃபாஷன் ஷோக்கள் (Pashion shaw) , அழகிப் போட்டிகள் போன்றவை எவ்வாறு முதலாளித்துவச் சுரண்டல்வாதிகள் கையிலும், நேர்மையும் நுண்ணுணர்வுமற்ற இடைத்தரகர்களிடத்திலும் சென்றடைந்துவிட்டனவோ அவ்வாறே தனிமனித சுதந்திரம், பெண்ணியம் போன்றவற்றையே மலினப்படுத்துகின்ற பாலுணர்வு அரசியல் போக்கிரிகளின் விளையாட்டுக் கூடமாகக் காதலர் தினக்கொண்டாட்டங்கள் மாறிவிடக்கூடிய அவலநிலையே நிலவுகிறது.
ஆகவே, மேற்கத்தேய திணிப்பான இக் காதலர் தினமானது இன்றைய சூழலில்.. நமது பண்பாட்டுக்கு எதிரான ஒன்று என்ற கருத்தை முற்றாக மறுதலிப்பதற்கு இல்லை. ஏனெனில் அது தன் உண்மையான கருத்தை உடைத்து சிதைந்த நிலையில் வீணான பண்பாட்டுச் சிதைவுகளை உண்டாக்குவதாக அமைந்து விட்டது.
எனினும், நமது பாரம்பரியமும் தமிழ்க் கலாச்சாரமும், இந்து தர்மமும் ஒரு போதும் காதலை எதிக்கவில்லை என்பதும், எப்போதும் அது காதலுக்குச் சார்பாகவே செயற்பட்டது என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. நமது அருளாளர்களின் வரலாறுகளும் இக்கருத்தையே உணர்த்துவனவாயுள்ளன.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லை கண்ணில் நல்ல அகிதுறும் கழுமல வளநகர் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே(தேவாரம்).

